பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டை வழங்கும் நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகாரப்பூர்வமற்ற சந்தையில் குறைந்துள்ளது. கரோனா நோய்க்கிருமி தாக்கத்தால் உலகில் உள்ள பங்குச்சந்தைகள் பீதியில் உள்ளன. சென்ற வாரம் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது, இது மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய பங்கு வெளியீடுகளையும் பாதித்துள்ளது.
புதன்கிழமை (பிப்ரவரி 26, 2020) அதிகாரப்பூர்வமற்ற சந்தையில் ரூ. 355-360ல் இருந்த எஸ் பி ஐ கடன் அட்டை வழங்கும் நிறுவனப் பங்குகளின் உயர்மதிப்பு (premium) நேற்று (சனிக்கிழமை – பிப்ரவரி 29, 2020) அன்று ரூ. 275-280 ஆக குறைந்துள்ளது.
இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான விண்ணப்பத்தின் விலை (kostak) ரூ. 4500ல் இருந்து நேற்று ரூ. 3300-3400 ஆக குறைந்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டை வழங்கும் நிறுவனத்தின் பங்கு வெளியீடு நாளை துவங்குகிறது. ஏற்கனவே இறங்குமுகத்தில் உள்ள பங்குச்சந்தை இந்த பங்குவெளியீட்டினால் மேலும் இறங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த பங்குவெளியீட்டிற்கு பணத்தை முதலீடு செய்வதால் பங்குச்சந்தையில் பணப்புழக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் ரூ. 750 – 755ல் வெளியிடப்படுகிறது.