இந்த பகுதியில் பங்குச்சந்தை பற்றி தெரிந்துகொள்வோம்.
தனியார் நிறுவனம் (Private Company):
ஒரு தனியார் நிறுவனம் பல வகைகளில் உருவாக்கப்படுகிறது
- தனியாக ஒருவர் முதலீடு செய்து வியாபாரம் செய்வது தனியார் நிறுவனம்.
- கூட்டாக பலபேர் முதலீடு செய்து வியாபாரம் செய்வது பங்கு நிறுவனம்.
தெரிந்தவர்கள் முதலீடு செய்து வியாபாரம் செய்யும் நிறுவனம் பங்கு நிறுவனம் (partnership) எனப்படும்.
முகம் தெரியாத பல பேர் சேர்ந்து வியாபாரம் செய்யும் நிறுவனம் கம்பெனி (Private Limited or Public Limited Company) எனப்படும். இந்த கம்பெனிகள் நடுவண் அரசின் ரெஜிஸ்ட்ரார் ஆப் கம்பெனிஸிடம் பதிவு செய்ய வேண்டும்.
பங்கு
கம்பெனிகளில் முதலீடு செய்பவர்களுக்கு பணத்திற்கு ஈடாக கொடுக்கப்படுவது பங்குகள் ஆகும்.
பங்குதாரர்கள்
ஒரு கம்பெனியில் பங்குகள் வைத்திருப்பவர்களை பங்குதாரர்கள் என்பர்.
பங்குச்சந்தை
பங்குதாரர்கள் வைத்திருக்கும் பங்குகளை வாங்கும் விற்கும் இடத்தை பங்குச்சந்தை என்பர்.
இந்தியாவின் முதன்மை பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE) ஆகும்.
இரண்டு வகை பங்குச்சந்தைகள் உள்ளன
முதன்மை பங்குச்சந்தை (Primary Market) – இந்த சந்தையில் கம்பெனிகள் முதலில் பங்குகளை வெளியிடும். இதை முதன்மை பங்கு வெளியீடு (IPO) என கூறுவர். இந்த பங்குகளை யார் வேண்டுமானாலும் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.
முதலீட்டாளர்கள் வாங்கிய பங்குகளை விற்பதற்கு அணுகும் சந்தையை வெளிச்சந்தை (Secondary Market) என்று கூறுவர். இந்த சந்தையில் ஏற்கனவே பங்கு வெளியிட்ட நிறுவனங்களை வாங்கவும் விற்கவும் முடியும்.
பங்குகளை வெளிச்சந்தையில் வாங்குவதற்கும் விற்பதற்கும் முதலீட்டாளர்கள் அணுகுவது பங்குத்தரகர்களை (Stock Brokers). பங்குத்தரகர்கள், பங்குச்சந்தையின் உறுப்பினர்கள் ஆவர். பங்குத்தரகர்களிடம், முதலீட்டாளர்கள் ஒரு கணக்கை துவங்கி பங்குச்சந்தையில் வர்த்தகம் (வாங்க / விற்க) செய்யலாம்.
முதலீட்டாளர்கள் ஆன்லைன் (online) அல்லது ஆப்-லைன் (off-line) முறையில் வர்த்தகம் செய்யலாம். ஆன்லைன் முறையில் முதலீட்டாளரே நேரடியாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம். ஆப்-லைன் முறையில், முதலீட்டாளர் பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் பங்குத்தரகரை அணுகி உத்தரவிடுவர்.