கடந்த வார வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு சந்தையில் 74ஐ தாண்டி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. கச்சா எண்ணெய் விலையும் ஏறுமுகமாகவே உள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்தியாவின் நிதி அமைச்சர் திரு அருண் ஜெய்ட்லி வியாழக்கிழமை அன்று ரூபாய் 1.50 வரியை குறைத்து சுமையை குறைத்துள்ளார். இது மட்டும் அல்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் ரூபாய் 1 சுமையை ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவித்தார். நிதி அமைச்சர் அறிவிப்பின்போது மாநில அரசுகளையும் ரூபாய் 2.50 வரை விலையை குறைக்கும்படி கேட்டுக்கொண்டார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள் பெரும்பாலும் விலையை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பால் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தது.
சென்ற வாரம் முதல் நிறுவனங்கள் 2018-19 வர்த்தக ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு மற்றும் அரையாண்டு நிதி முடிவுகள் அறிவிப்பது தொடங்கியது. கே பி எனர்ஜி மற்றும் கோவா கார்பன் நிறுவனங்கள் நிதி முடிவுகளை அறிவித்தது. வரும் வாரம் பந்தன் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனங்கள் நிதி முடிவுகளை அறிவிக்க உள்ளது.
சென்ற வாரம் மும்பை பங்குச்சந்தை குறியீடு 1850.15 புள்ளிகள் குறைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்தது. திங்கள்கிழமையன்று 36227.14ல் தொடங்கிய சென்செக்ஸ் குறியீடு 36616.64 என்ற உச்சத்தை தொட்டது. இது மெதுவாக குறைந்து வெள்ளிக்கிழமையன்று 34202.22ஐ தொட்டது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் குறியீடு 34376.99ல் முடிந்தது.
கடந்த வாரம் சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகளில் விலை வீழ்ச்சி அடைந்தவை:
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் (₹ 146.95 / -17.09%)
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (₹ 1049.85 / -16.56%)
ஏர்டெல் நிறுவனம் (₹ 296.75 / -12.27%)
மஹிந்திரா நிறுவனம் (₹ 768.60 / -10.70%)
அடானி போர்ட்ஸ் (₹ 302.05 / -8.04%)
கடந்த வாரம் சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகளில் விலை ஏற்றம் அடைந்தவை:
ஐ சி ஐ சி ஐ வங்கி (₹ 306.60 / +0.52%)
விப்ரோ நிறுவனம் (₹ 325.30 / +0.34%)
வேதாந்தா நிறுவனம் (₹ 231.85 / +0.04%)
சனிக்கிழமையன்று தேர்தல் ஆணையம் நான்கு மாநிலத்திற்கான தேர்தல் தேதிகளை அறிவித்தது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தைகள் நாடாளுமன்ற தேர்தல் வரை ஸ்திர தன்மை இல்லாமல் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் ஏறுமுகமாகவே இருக்கும். தற்போதைய சூழலில் ரூபாயின் வீழ்ச்சி இறக்குமதியை பாதிக்கும், ஏனென்றால் இந்தியா ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் செய்கிறது. ரூபாயின் வீழ்ச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். மென்பொருள், மருந்து மற்றும் இதர ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இது கூடுதல் வருவாயையும், லாபத்தையும் ஈட்டி தரும்.