அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு உதவும் ஒரு முன்னோடி திட்டம். இது இந்திய அரசால் பெண் குழைந்தளுக்காக செயல்படுத்தப்படும் முதலீட்டு திட்டம். பெண் குழந்தைகளின் படிப்பு, கல்யாணம் போன்ற எதிர்கால செலவுகளுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம். இந்த முதலீட்டு திட்டம் 2015வது ஆண்டில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பிரச்சாரத்தின் பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சமாக ரூபாய் 1000, அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 வரை செலுத்தலாம். ரூபாய் 1000ற்கு பிறகு ரூபாய் 100ஆக எவ்வளவு வேண்டுமானாலும் கட்டலாம். ஒருவர் அந்த நிதி ஆண்டில் மாதத்திற்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம், அதற்கு உச்ச வரம்பு இல்லை.
வட்டி விகிதம்
இந்த முதலீட்டு திட்டத்தில் ஜனவரி 1, 2018ல் இருந்து ஆண்டிற்கு 8.1% வட்டி விகிதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி வருடத்திற்கு ஒரு முறை ஆண்டு வட்டி கூட்டல் முறையில் கணக்கிடப்படும். இந்த வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது இயற்கை காப்பாளர் இந்த திட்டத்தில் பெண் குழந்தையின் பெயரில் துவக்கலாம்.
- ஒரு பாதுகாவலர் ஒரு குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே துவங்கலாம். அதிகபட்சமாக இரண்டு கணக்குகள் இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் துவக்கலாம்.
- பெண் குழந்தையின் 10 வயதிற்குள் மட்டுமே கணக்கு துவங்க முடியும். திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது ஒரு ஆண்டு கருணை காலம் கொடுக்கப்பட்டது.
- ஒரு நிதி ஆண்டில் ரூபாய் 1000 செலுத்தப்படவில்லை என்றால் அந்த கணக்கு காலாவதி ஆகிவிடும். அந்த கணக்கை மறுபடியும் புதிப்பிக்க குறைந்தபட்ச தொகையுடன் ரூபாய் 50 அபராதம் செலுத்தவேண்டும்.
- இத்திட்டத்தில் ஒரு பகுதி தொகையை 18 வயது முடிந்த பின் எடுக்கலாம். அந்த தொகை சென்ற நிதி ஆண்டின் கடைசியில் இருந்த தொகையில் 50% வரை எடுக்க அனுமதிக்கப்படுவர்.
- இத்திட்டத்தில் திறந்த கணக்கை பெண் குழந்தையின் 21 வயது முடிந்தவுடன் மூடலாம்.
- பெண் குழந்தைக்கு 18 வயது முடிந்து திருமணம் ஆகிவிட்டால் இந்த கணக்கை முன்கூட்டியே மூட அனுமதிக்கப்படுவர்.
கணக்கு துவங்குவதற்கு தேவையான ஆவணங்கள்
- பிறப்புச் சான்றிதழ்
- பாதுகாவலர் / காப்பாளரின் அடையாள சான்று
- பாதுகாவலர் / காப்பாளரின் முகவரி சான்று
வரிவிலக்கு
இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 80சி பிரிவின் கீழ் வருமான வரிவிலக்கு உண்டு. இத்திட்டத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வு தொகைக்கும் வருமான வரிவிலக்கு உண்டு.