இந்திய குடிமக்கள் வெளிநாட்டில் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இந்திய அரசின் தாராளமயமாக்கும் கொள்கை மற்றும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டம். இதன் மூலம் இந்திய குடிமக்கள் வெளிநாட்டு பங்குகள், பரஸ்பர நிதி திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். தனிநபர் வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதைப்பற்றி கீழே காணலாம்.
தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டம் (LRS)
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கட்டுப்பாடுகளுக்குட்பட்ட, உள்நாட்டு பிரஜைகள் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின்படி (LRS), அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் வாயிலாக $ 2,50,000 அமெரிக்க டாலர்கள் வரை ஒரு நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச்) வெளிநாட்டிற்கு பணம் சுதந்திரமாக அனுப்ப அனுமதி உள்ளது. இப்படி அனுப்பும் பணத்தை நடப்பு கணக்கு அல்லது மூலதன கணக்கு அல்லது இரண்டும் இணைந்த செலவிற்கு உபயோகிக்கலாம்.
நடப்பு கணக்கு பரிவர்த்தனைகளுக்கு உட்பட்டவை
தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின்படி (LRS) $ 2,50,000 அமெரிக்க டாலர்கள் வரை ஒரு நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பரிவர்த்தனைகளுக்கு உபயோகிக்கலாம். இதில் தனிப்பட்ட வருகை, பரிசு / நன்கொடை, வேலைக்காக வெளிநாடு செல்வது, குடியேற்றம், வெளிநாட்டில் உள்ள நெருங்கிய சொந்தங்களின் பராமரிப்பு, வணிகத்திற்காக பயணம், வெளிநாட்டில் மருத்துவ செலவிற்காக மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கு உட்பட்ட செலவுகள் அடங்கும்.
மூலதன கணக்கு நடவடிக்கைகளுக்கு உட்பட்டவை:
தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின்படி (LRS) ஒரு தனிநபருக்கு அனுமதிக்கப்பட்ட மூலதன கணக்கு நடவடிக்கைகள் கீழ்கண்டவையாகும்:
- வெளிநாட்டில் வங்கியில் அந்நிய செலாவணி கணக்கு துவங்குவதற்கு
- வெளிநாட்டில் சொத்து வாங்குவதற்கு
- வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு – வெளிநாட்டில் பங்குகள் (சந்தையில் பட்டியலிடப்பட்ட அல்லது பட்டியலிடப்படாத) வாங்குவதற்கு மற்றும் வைத்திருப்பதற்கு, கடன் பத்திரங்கள், இயக்குனராக பணிபுரியும் வெளிநாட்டு நிறுவனத்தில் தகுதி பங்குகள் வாங்குவதற்கு, இயக்குனராக தொழில் முறை சேவைகள் புரிந்ததற்கு பணத்திற்கு பதிலாக பங்குகள் வாங்குவது, பரஸ்பர நிதி திட்டம், துணிகர மூலதன நிதி, மதிப்பிடப்படாத கடன் பத்திரங்கள், கடனுறுதிச் சீட்டு.
- இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நேர்மையான வியாபாரத்திற்காக முழுவதும் சொந்தமான துணை நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் துவங்க.
- 2013 நிறுவனங்கள் சட்டப்படி குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு வாழ் இந்திய உறவினர்களுக்கு கடன் கொடுப்பதற்கு (ரூபாயில் கடன் கொடுப்பதும் அடங்கும்).
தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின்படி (LRS), வெளிநாட்டிற்கு பணம் அனுப்பும்பொழுது நிரந்தர கணக்கு எண் (PAN) கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. (சர்வதேச கடன் அட்டைகள் உபயோகம் மூலம் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டத்தின்படி பரிவர்த்தனைகள் செய்வதும் அடங்கும்)
தனிநபர்கள் 2,50,000 அமெரிக்க டாலர்களை தாண்டி பரிவர்த்தனை செய்தால், அவர்களுக்கு வங்கிகள் அதற்குமேல் அந்நிய செலாவணி வசதியை கொடுக்காது (வெளிநாட்டிற்கு பணம் அனுப்புதல் / அந்நிய செலாவணி / பயண அட்டை / சர்வதேச கடன் அட்டை). பயண அட்டை மற்றும் சர்வதேச கடன் அட்டையை தடை செய்வதும் நடக்கலாம்.
இத்திட்டத்தை பற்றி மேலும் தகவல் பெற இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இணையதளத்தின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://rbi.org.in/Scripts/NotificationUser.aspx?Id=10192&Mode=0
LRS – Liberalised Remittance Scheme