பர்கர் கிங் இந்தியா நிறுவனம், இந்தியாவில் பர்கர் கிங் உணவகங்களை திறப்பதற்கான முதன்மை உரிமத்தை பெற்றுள்ளது. இந்த பிரத்யேக உரிமைக்காக ரெஸ்டாரன்ட் ப்ராண்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் 2039ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்துள்ளது.
ரெஸ்டாரன்ட் ப்ராண்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் உலகளவில் பல விரைவான சேவை உணவகங்களை (QSR ) நடத்தி வருகிறது. உலகளவில் பர்கர் கிங் உணவகங்கள், பர்கர் விற்கும் விரைவான சேவை உணவகங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.. இந்த நிறுவனத்தின் 18,600 உணவகங்கள் 100 நாடுகளில் உள்ளன.
இந்தியாவில் குறைந்த அளவில், அதாவது 10 லட்சம் மக்களுக்கு 15 விரைவான சேவை உணவகங்கள் உள்ளன. இதுவே, சீனாவில் 158ஆகவும் அமெரிக்காவில் 725ஆகவும் உள்ளது. இந்தியாவில் விரைவான சேவை உணவகங்கள் 2025ம் ஆண்டு வரை, ஆண்டிற்கு 23% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பர்கர் கிங் உணவகங்கள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விரைவான சேவை உணவகங்களில் ஒன்று. இந்நிறுவனம் முதல் 5 ஆண்டுகளிலேயே 200 உணவகங்களை திறந்துள்ளது. தற்பொழுது இந்நிறுவனம் 17 மாநிலங்களில், 268 உணவகங்களை வைத்துள்ளது.
பர்கர் கிங் நிறுவனம் இந்தியாவில் உள்ள இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை குறி வைத்துள்ளது. இளைய தலைமுறையினர் பெரும்பாலும் வெளியே உண்ணுவது அல்லது வெளியே வாங்கி சாப்பிடுவதை விரும்புகின்றனர். இந்தியாவின் ஜனத்தொகையில், இளைய தலைமுறையினர் பெரும் பகுதி வகிக்கின்றனர்.
இந்திய மக்களின் சுவை மற்றும் விருப்பத்திற்கேற்ப பர்கர் கிங் நிறுவனம் உணவு பட்டியலை தயாரித்துள்ளது. உணவு பட்டியலில் நிறைய சைவ உணவுகளையும் சேர்த்துள்ளது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக, இந்த நிறுவனத்தின் உணவகங்களில் பல்வேறு வகையான உணவுகளை தயாரிக்க தனியாக இடங்கள் உள்ளன.
இந்தியாவில் மிகுந்த திறமை மற்றும் தொழில் வல்லமை கொண்டவர்களால் இந்நிறுவனம் நடத்தப்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. ராஜீவ் வர்மன் உள்ளார். இவர் பர்கர் கிங் நிறுவனத்தில் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார்.
பர்கர் கிங் இந்தியா நிறுவனம் தற்பொழுது இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிடுகிறது. இந்த நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டிற்கு முன் ரூ. 92 கோடி மதிப்புள்ள பங்குகளை அமன்சா இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.
இந்த நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் விலையை ரூ. 59 முதல் ரூ. 60 வரை நிர்ணயம் செய்துள்ளது. முதலீட்டாளர்கள் புதன்கிழமை, டிசம்பர் 2, 2020 முதல் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 4, 2020 வரை விண்ணப்பிக்கலாம்.
சிறிய முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 250 பங்குகளும், அதிகமாக 3250 பங்குகளும் விண்ணப்பிக்கலாம்.
புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக பெரும் தொகையினை, இந்நிறுவனம் புதிய உணவகங்களை திறக்கவும் மற்றும் கடன்களை அடைக்கவும் உபயோகப்படுத்த உள்ளது. டிசம்பர் 2026ற்குள், இந்நிறுவனம் 700 உணவகங்களை திறக்க எண்ணியுள்ளது.