கடந்த வார வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீடு சென்செக்ஸ் 300 புள்ளிகள் ஏறி 37947.88 ல் முடிவுற்றது. வாரத்தின் முதல் நாள் சென்செக்ஸ் குறியீடு 37693.19 புள்ளிகளில் துவங்கியது, ஏற்ற இறக்கமாக இருந்தது.
சென்ற வாரம் திங்கட்கிழமை 11369.60 புள்ளியில் துவங்கிய தேசிய பங்குச்சந்தை நிப்டி குறியீடு, வாரத்தின் கடைசியில் 11470.75ல் முடிந்தது.
கடந்த வார வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு சந்தையில் 70 தை தாண்டியது. இது இந்தியாவின் இறக்குமதியை பாதிக்கும், ஏனென்றால் இந்தியா ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் செய்கிறது. ரூபாயின் வீழ்ச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மென்பொருள், மருந்து மற்றும் இதர ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இது கூடுதல் வருவாயையும், லாபத்தையும் ஈட்டி தரும்.
சென்ற வாரத்துடன் நிறுவனங்கள் 2018-19 வர்த்தக ஆண்டுக்கான முதல் காலாண்டு நிதி முடிவுகள் அறிவிப்பது முடிந்தது. நிறைய சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள் நல்ல முடிவுகளை அறிவித்துள்ளது, இது பங்குச்சந்தைக்கு ஊட்டம் அளித்துள்ளது.
இந்தியாவின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் சுதந்திர தின உரையில் புதிதாக அறிவிக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தை பற்றி விவரங்களை அறிவித்தது (ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம்) மருந்து மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பங்குச்சந்தைகள் நாடாளுமன்ற தேர்தல் வரை ஸ்திர தன்மை இல்லாமல் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் ஏறுமுகமாகவே இருக்கும். தற்போதைய சூழலில் சுரங்கம், இரும்பு, மருந்து, மென்பொருள் மற்றும் இதர ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் முதலீட்டிற்கு ஏற்றதாக உள்ளது.